எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
விழுப்புரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை ஆட்சியர் பழனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்காவில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்பணர்வு மாரத்தான் பந்தயம், முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் சிறுவர் பூங்கா வந்தடைந்தது. இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருவண்ணாமலை நகரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் காவல்துறையினர் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவுப்படி நகர காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பதற்றமான வாக்குச் சாவடிகளான சமுத்திரம் காலனி, கல் நகர், தேனிமலை ஆகிய இடங்களில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் முதியோர்களுடன் விளையாடி மாவட்ட தேர்தல் அதிகாரி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். உதகை அருகே உள்ள முள்ளிகொரை பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தேர்தல் அதிகாரி அருணா சென்றார். அப்போது முதியோர்கள் அனைவரும் ஆட்சியருக்கு மலர் கொடுத்து வரவேற்றனர். அப்போது, 100 சதவீதம் வாக்களிப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.